மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டிய பணிகளை, மழை தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் செய்துவருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாகக் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், முனிச்சாலை, சிம்மக்கல், தெப்பக்குளம், தெற்குவாசல், நெல்பேட்டை என மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன.
சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம், சிம்மக்கல் வரையிலும், மேலமடை பாண்டி கோயில் சுற்றுவழிச்சாலை பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாலும் அப்பகுதி சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டிய சாலைப் பணிகள், மழைக்காலம் தொடங்கிய பின்பும் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதால், பொதுமக்கள் உயிர் பயத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது போன்ற குண்டும், குழியுமான சாலைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை இயக்குவோர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு வருமானமும், வாகனங்களைப் பழுதுசெய்வதற்கே போதுமானதாக இல்லாத நிலையில், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சாலை வரியில் தொடங்கி அனைத்து விதமான வரிகளையும் உரிய நேரத்தில் பெறும் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும், மக்கள் பயணிக்க அடிப்படை வசதியானசாலையைக் கூடட முறையாமல்பராமரிக்கத் தவறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழும் அளவிற்குஅபாயகரமானதாகக் காட்சியளிக்கும் சாலைகளைஉடனடியாகச் சீரமைக்கக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















