தென்னை வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரச குழு அமைத்துள்ளதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது. இந்த நிலையில், வாடல் நோய் காரணமாக, தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால், விளைச்சல் மிகவும் குறைந்திருக்கிறது.
சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சௌகானிடம் தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக, வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், நோயைக் கட்டுப்படுத்தவும், குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விவசாயிகள் நலனில் முழு அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















