லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அச்சம் ஏற்பட்டுளளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளுக்கான வாடகையை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியின் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வெளி மாவட்ட அரவைகளுக்காக எடுத்துச் செல்லும் செயல்முறையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெள்ளத்தாலும், முறையான கொள்முதல் நடைபெறாத காரணத்தாலும் பல மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டிப்போயுள்ள நிலையில், நமது அரசு இயந்திரத்தையும் விவசாயப் பெருமக்களையும் மேலும் நிலைகுலையைச் செய்யும் இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது அறிவாலய அரசின் தலையாய கடமை.
எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே தேக்கத்தில் உள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















