அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கையே ஓங்கி இருந்தது என்று தகவல்கள் தெரிவித்தாலும், இந்தச் சந்திப்புக் குறித்து அதிபர் ட்ரம்ப் 12க்கு பத்து மதிப்பெண் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே சீனா மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அந்நாட்டின் மீது அதிகமான வரியை விதித்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, சீனாவும் அரிய வகை தாதுக்கள் மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப் பாடுகளை விதித்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் வர்த்தக மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இருநாட்டு அதிபர்களும் தென்கொரியாவின் பூசான் நகரில் சந்தித்து, 100 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு “பெரிய வெற்றி” என்றும், சீன அதிபர் ஒரு சிறந்த மனிதர் என்றும் குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், பல முக்கியமான விஷயங்களில் நல்ல முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று கூறிய அதிபர் ட்ரம்ப், அடுத்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வதாகவும், அதன் பிறகு சீன அதிபர் அமெரிக்காவுக்கு வர உள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பெரும் மோதலின் முக்கிய புள்ளியாக இருக்கும் அரிய தாதுக்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சீன அதிபருடன் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சீனாவுக்கு 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப் போவதாக அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபருடனான சந்திப்புக்குப் பின், சீனா மீதான வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கிய வர்த்தக பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகக் கூறியுள்ள சீன அதிபர், இரண்டு பொருளாதாரங்களுக்கும் உறுதியளிக்கும் மருந்தாகச் செயல்பட்டு, நேர்மறையான பயன்களை உலகத்துக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் முதலில் இருந்தே பேச்சுவார்த்தைகளைச் சீன அதிபரே ஆதிக்கம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் தேசிய வேறுபாடுகள் காரணமாக “எப்போதும் நேருக்கு நேர் பார்ப்பதில்லை” என்று வெளிப்படையாகக் குறிப்பிட்ட சீன அதிபர், அத்தகைய வேறுபாடுகள் ஒத்துழைப்பைத் தடுக்கக் கூடாது என்றும் அழுத்தமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சீனாவின் அரியவகை தாதுக்களை மற்றும் மற்றும் காந்தங்களைப் பெறுவதற்கு ஈடாக, உக்ரைன் மற்றும் தைவான் குறித்த சீனாவின் கருத்தை அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் நடந்த மொத்த பேச்சுவார்த்தையும் சீன அதிபரின் விதிமுறைகளின் படியே நடந்துள்ளது என்பது சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்பின் வார்த்தைகளில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
			 
                    















