ஆஃப்கானிஸ்தான் தாலிபான் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம், பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சியின் மையமாக உள்ளதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதால் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
பயங்கரவாத அத்துமீறல், எல்லை பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான அவநம்பிக்கைகள் பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் நாடுகளிடையே மோதலை ஏற்படுத்திப் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தான் தனது நிலப்பரப்பில் பயங்கரவாத குழுக்களுக்குப் பயிற்சி, நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கி, அவற்றைத் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருவதாக ஆஃப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வரும் பாகிஸ்தானோ அத்துமீறிய தாக்குதல்கள் ஆஃப்கானிஸ்தானில் இருந்தே நடைபெறுவதாகக் கூறி வருகிறது. இதுதவிர டோர்கம் எல்லையில் நிகழும் போதைப்பொருள் கடத்தல், தலிபான் ஆட்சிக்குச் சர்வதேச அங்கீகாரம் இல்லாமை, அகதிகள் பிரச்னை உள்ளிட்டவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இதற்கிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த சயீதுல்லா என்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியைத் தலிபான் படைகள் கைது செய்துள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் குவெட்டா பகுதியில் பயிற்சி பெற்றதையும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி டோர்கம் எல்லை வழியாக ஆஃப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த வீடியோவை அண்மையில் தலிபான் படைகள் வெளியிட்டது.
அதில் சயீதுல்லா தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதுடன், பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சி வலையமைப்பை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். குறிப்பாகத் தன்னை குவெட்டா மலைப்பகுதிகளில் அழைத்துச் சென்று ஜிஹாத் மனப்போக்கை ஏற்படுத்தப் பல மாதங்கள் தீவிர மூளைச்சலவை செய்ததாகச் சயீதுல்லா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஆஃப்கான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், சயீதுல்லாவின் ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தையும், சர்வதேச ரீதியிலான அழுத்ததையும் உருவாக்கியுள்ளது.
தங்கள் நாட்டிற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்புமில்லை எனப் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மறுத்து வரும் நிலையில், இந்த வீடியோ அவர்களின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகப் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகச் செயல்படுவதை இந்த வீடியோ நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன் கடந்த ஜனவரியிலும் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் வழியாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்குப் புதிய ஆட்சேர்ப்பு நடப்பதாகவும் ஆஃப்கன் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
மேலும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பகுதிகளுக்கு அனுப்பப்படும் அவர்கள், அங்கு ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்த தீவிர பயிற்சிகள் பெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை ஆஃப்கானிஸ்தான் அடுத்தடுத்து இருமுறை வெட்டவெளிச்சமாக்கியிருப்பது பிற உலக நாடுகளிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் என்னதான் பாகிஸ்தான் தீவிரவாத செயல்பாடுகளுக்கு எதிராகப் பேசித் தன்னை பலிகடாவாகக் காட்டிக்கொண்டாலும், எதார்த்தத்தில் அந்நாடு தீவிரவாதத்தை உருவாக்கும் இயந்திரம்போல் செயல்படுவதை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டு காட்டுவதை யாரும் மறுக்க முடியாது.
 
			 
                    















