உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புரட்சி பில்லியனர்களின் செல்வத்தைப் பெருக்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அதில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆசியா முழுவதும், செல்வத்தின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக 2025-ம் ஆண்டுக்கான பில்லியனர் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…
செயற்கை நுண்ணறிவு புரட்சி மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில், பொருளாதார வளர்ச்சிக்கும், பங்குச் சந்தை உயர்வுக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பைப் பெரிதும் உயர்த்தி, அதில் முதலீடு செய்த பில்லியனர்களின் செல்வத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க், மார்க் சக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் போன்ற மாபெரும் தொழில்நுட்ப தலைவர்களின் சொத்து மதிப்புகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வால் அபாரமாக வளர்ந்துள்ளன. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தற்போது தொழில்நுட்பத் துறையை மட்டுமன்றி, உலகளாவிய செல்வ விநியோகத்தையும் மாற்றி அமைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
அதேசமயம், சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆசியாவில் செல்வ வளர்ச்சி மந்தமாகியுள்ளது எனச் செல்வ ஆய்வு நிறுவனமான அல்ட்ராடா வெளியிட்ட 2025-ம் ஆண்டுக்கான பில்லியனர் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில்தான் பணக்காரர்கள் அதிகளவில் செல்வ உயர்வைப் பெற்றுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் முன்னணி 10 பேரில் 9 பேர் தொழில்நுட்ப துறையினர் எனவும், உலக அளவில் வெறும் 26 பேர்தான் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தை வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள்தான் உலக பில்லியனர்களின் மொத்த செல்வத்தின் 21 சதவீதத்தை கட்டுப்படுத்துவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு வெறும் 4 சதவீதமாக இருந்ததாகவும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் உலகளாவிய செல்வம் சிலரிடம் மட்டுமே மிகுந்த அளவில் குவிந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. குறிப்பாகப் பில்லியனர்களின் செல்வத்தில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. உலக பில்லியனர்களின் மொத்த செல்வத்தில் 43 சதவீதம் அமெரிக்கர்களின் கைவசம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் மொத்தமாக ஆயிரத்து 135 பில்லியனர்கள் உள்ள நிலையில், இது உலக பில்லியனர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகப் பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம் ஐரோப்பாவிலும் பில்லியனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதல் முறையாக ஆயிரத்தை கடந்தது. அதே நேரத்தில் ஆசியாவிலோ வெறும் 2.6 சதவீத வளர்ச்சியே பதிவாகியுள்ளதாக அல்ட்ராடா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார மந்தநிலையும், பிராந்திர சந்தைகளின் பலவீனமான செயல்திறனும் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உலகளாவிய செல்வம் சிலரிடம் மட்டுமே அதிக அளவில் குவிந்திருப்பது, உலகில் பொருளாதார சமநிலையின்மை நிலவுவதன் வெளிப்பாடு எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி உலக செல்வப் பங்கீட்டையும், பொருளாதார ஆற்றலையும் அதிகளவு மறுசீரமைக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
 
			 
                    















