பாகிஸ்தானுக்கு இரங்கல் செய்தியாக ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை கூடப் பயன்படுத்தாமல் பாகிஸ்தானை இந்தியா முடக்கி போட முடியும் என்பதையும் பாகிஸ்தானின் உயிர், இந்தியாவின் கருணையைச் சார்ந்திருக்கிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் இருந்து பிரிந்து இஸ்லாமிய நாடாக உருவானதில் இருந்தே, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தையே தங்கள் நாட்டின் அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் தனது பிடி இந்தியாவின் கையில் உள்ளது என்பதை தெரியாமல் இருக்கிறது. சர்வதேச அளவில் மதிக்கப்படும் சிறந்த சிந்தனைக் குழுக்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில், சிந்து நதியின் நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும், அதைத் தடுக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்குக் கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது பாகிஸ்தானைத் திகிலடைய வைத்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இந்து சுற்றுலா பயணிகள் இந்து என்பதறகாகவே கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் தலைமையகம் மற்றும் பயிற்சி முகாம்களைத் துல்லியமாக தாக்கித் தரைமட்டமாக்கியது.சுமார் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கால வரையறை இல்லாமல் நிறுத்தி வைத்தது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தின் படி, பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் உள்ளிட்ட கிழக்கு நதிகளின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்தியா மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் தண்ணீரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள உறுதியளித்திருந்தது.
இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் பாகிஸ்தானுக்கு மேற்கு நதிகளின் நீரைக் கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பெரிய அடியாகும். ஏன் என்றால், பாகிஸ்தானின் 80 சதவீத விவசாய உற்பத்தி, சிந்து நதியிலிருந்து வரும் தண்ணீரையே முழுமையாக நம்பியிருக்கிறது.
அந்த நீர் இந்தியா வழியாகவே பாகிஸ்தானைச் சென்றடைகிறது. இந்த உண்மையைத் தான் இப்போது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தின் ஆய்வறிக்கை விவரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே தண்ணீரைச் சேமிக்கும் திறனுள்ளது.
இதனால் சிந்துநதியின் நீரோட்டத்தில் ஏதாவது தடை ஏற்பட்டால், பாகிஸ்தானில் வரலாறு காணாத பஞ்சம் உருவாகும் என்றும், பெரும் பொருளாதார வீழ்ச்சி உண்டாகும் என்றும், பசி பட்டினியால் ஆயிரக் கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரும் என்றும், மக்கள் வாழ வழியின்றி அகதிகளாகப் புலம் பெயரக்கூடும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இதற்காகச் சிந்து நதியின் நீரோட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, சிந்து நதி அணை நடவடிக்கைகளில் சிறு மாற்றத்தை இந்தியா செய்தாலே, பாகிஸ்தானை முற்றிலுமாக அழித்துவிட முடியும் என்று தெரிவித்துள்ளது.
அதாவது, பாகிஸ்தான் மீது போரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏவுகணைகளை வீச வேண்டிய அவசியமில்லை. எல்லையைத் தாண்டி இராணுவத் துருப்புக்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. சில வால்வுகளைத் திருப்பினால் போதும், சிந்து நதி அணைகளில் சரியான நேரத்தில் மூடி, திறந்தாலே போதுமானது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மொத்தமும் சுக்கு நூறாக நொறுங்கி விடும். உதாரணமாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், செனாப் நதி அணையை மூடியது. பாகிஸ்தானின் விவசாய நிலங்கள் வறண்டன. பின்னர் இந்தியா அணையைத் திறந்தது. வண்டல் மண் நிறைந்த, கொந்தளிப்பான நீரின் எழுச்சி மீண்டும் பாகிஸ்தானை வெள்ளத்தில் தள்ளியது. சிந்து நதி அணை மூடிய போதும் திறந்த போதும், உதவியற்ற நிலையில் பாகிஸ்தான் பேரழிவைச் சந்தித்தது.
அணையைத் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தை இந்தியாவே கட்டுப்படுத்துகிறது. நீர் வெளியேற்றத்தின் நேரத்தையும் இந்தியாவே தீர்மானிக்கிறது. சிந்து நதியின் அனைத்து உரிமைகளையும் இந்தியாவே கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகவே இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாகப் பயங்கரவாதத்தையே பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவை வெல்ல அணு ஆயுதங்கள் மற்றும் ஜிகாதி பயங்கரவாதிகளே தேவை என்று பாகிஸ்தான் நம்புகிறது.
பாகிஸ்தான் போட்ட மொத்த கணக்கும் தவறாகி போயிருக்கிறது. மாறாகக் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அணைகளைக் கட்டியுள்ளது. நீண்டகால நீர் உள்கட்டமைப்பு திட்டங்களையும் நீர்மின் திட்டங்களையும் இந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக நதிநீர் ஓட்டங்களை ஒழுங்குபடுத்தும் நவீனத் தொழில்நுட்ப திறனையும் இந்தியா உருவாக்கியுள்ளது. எல்லைதாண்டிய பயங்கரவாத போதை காரணமாக இந்தியாவின் நதி நீரை இழந்து நிற்கிறது பாகிஸ்தான்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில் ,பாகிஸ்தான் பேரழிவில் உள்ளது. இருந்த இடத்தில் இருந்தபடியே, பாகிஸ்தானின் கழுத்தை நெறிக்கும் இந்தியாவின் வலிமை பாகிஸ்தானுக்கு மரண எச்சரிக்கை ஆகும். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இதைச் சமாளிக்கும் சக்தியும் இல்லாமல் திணறுகிறது என்று ஆஸ்திரேலிய நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
















