வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சீரமைக்கக் கோரி மனு அளித்தால், வீட்டைவிட்டு வெளியேறுமாறு பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளில் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடனே வாழ வேண்டிய சூழலுக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த கட்டடங்களாலும், அடிக்கடி இடிந்து விழும் மேற்கூரைகளாலும் குடியிருப்புவாசிகள் வசிக்கவே அச்சப்படக்கூடிய வகையில் காட்சியளிக்கும் இந்த பாழடைந்த கட்டடம் தான் மதுரையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட செண்பகத் தோட்டம் குடியிருப்பு. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உதிர்ந்து கம்பிகள் அனைத்தும் எலும்புக் கூடுகள் போல காட்சியளிக்கின்றன.
செண்பகத் தோட்ட குடியிருப்பு மட்டுமல்ல, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. நெல்பேட்டையில் அமைந்துள்ள குடியிருப்பில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து காவலர் பலி, கடந்த நான்காம் தேதி வண்டியூர் யாகப்பா நகரில் இருக்கும் குடியிருப்பு சரிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலி என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாடி படிகளில் உள்ள பால்கனிகள் மற்றும் கைப்பிடிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பதோடு, மாடிப் படியையே முங்கில் கம்பு கொண்டு முட்டு கொடுத்திருக்கும் காட்சி பார்க்கும் போதே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை புணரமைக்க கோரிக்கை வைக்க சென்ற மக்களிடம், வீடுகளை காலி செய்ய பதில் நோட்டீஸ் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் இந்த குடியிருப்பில் ஒவ்வொரு இரவையும் கழிக்கவே பெரும் போராட்டமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே சேதமடைந்த கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















