எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாகவும், தனக்கு ஆதரவாக இருக்க கூடிய வாக்குகளை வைத்து கொண்டு எதிரான வாக்குகளை நீக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும் உதயநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேர்தல் ஆணையம் நடத்தி வரும் Special Intensive Revision என்ற செயல்முறையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Special Intensive Registration எனத் தவறாக குறிப்பிடுவதாக கூறியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் என்பதன் பொருள் சரியாகத் தெரியவில்லை என்றால், இதன் உண்மையான செயல்முறையும் அவருக்கு தெரியாது என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர் செயல்முறை தமிழகத்தில் மட்டும் அல்ல, மொத்தம் 12 மாநிலங்களில் நடைபெறுவதாகவும், அதில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பிடிக்கவில்லை என்றும், முறைகேடுகளால் திமுக வெற்றி பெறுவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.
















