வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 280 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் இரண்டாம் பூர்வீகப் பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடியும், பெரியார் கால்வாய் பாசனத்திற்காக ஆயிரத்து 280 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 280 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட கரையோர மக்களுக்கும், பெரியார் பிரதான கால்வாய் செல்லும் வழியில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் மற்றும் கால்வாயில் குளிப்பதற்கோ, இறங்கவோ முயற்சிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















