தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோவை சர்வதேச விமான நிலையப் பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை மூன்று சமூகவிரோதிகள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் பெண்கள் மீதான கொடூர குற்றங்கள் சிறிதளவும் குறைந்தபாடில்லை என்பதற்கு உதாரணமாக, தற்போது கோவையில் இப்படியானதொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாள்தோறும் பல்லாயிரம் பேர் உபயோகித்து வரக்கூடிய இந்த கோவை சர்வதேச விமானப் நிலையப் பகுதியைச் சுற்றிலும், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தின் மிகவும் முக்கியமான இப்பகுதியில், இளம்பெண் ஒருவர் மீது நடைபெற்றுள்ள இந்தப் பாலியல் வன்முறையானது, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் காவல்துறையின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்பை இந்த திமுக அரசின் காவல்துறை கேள்விக்குறியாக்கியுள்ளது. சர்வதேச அளவிலான காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட நமது காவல்துறை, தமிழக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் மிகப்பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது என்பது வேதனைக்குரிய உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு கடவுள் துணையிருக்க வேண்டிக்கொள்வதோடு, மாணவிக்கு தேவையான சிகிச்சை மற்றும் இழப்பீட்டை வழங்கிட வேண்டுமென்று தமிழக அரசை கடுமையாக வலியுறுத்துகிறேன். மேலும், இக்குற்றத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள், எவ்வித பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று எல். முருகன் வலியுறுத்தி உள்ளார்.
















