2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கான முதல் தூதரைத் தாலிபான் அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1990களில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள் கையில் வந்தபோது அவர்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. ஆனால், 2021ம் ஆண்டு, மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் வந்தபிறகு, நிலைமை முற்றிலுமாக மாறியது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களில் தாலிபன்களின் புதிய தூதர்களின் நியமனங்களை ஏற்க மறுத்துவிட்டன.
சில நாடுகளில் மட்டுமே தாலிபன்களால் நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேசஅளவில் ரஷ்யா மட்டுமே தலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது.
தலிபான்கள் தலைமையிலான ஆப்கான் அரசுடன் இந்தமுறை இந்தியா புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைச் சார்ந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. அளவான தொடர்பை மேற்கொண்டது.
தலிபான்களின் ஆட்சியையும் அந்நாட்டின் புதிய கொடியையும் அங்கீகரிக்காத இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசு அந்நாட்டில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காபூலில் இயங்கி வந்த தனது தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது. 2022ஆம் ஆண்டு, மனிதாபிமான உதவிகளுக்கான ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பிய இந்தியா, ஆப்கானிஸ்தானில் தனது தூதரக இருப்பை மீண்டும் ஏற்படுத்தியது.
2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வரும் தாலிபான்களுக்கு நாட்டின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மேலும் நிதியுதவி தேவைப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்க் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்ட நிலையில் இந்தியாவை “நெருங்கிய நண்பர்” என அழைத்த அமீர்கான் முத்தாகி, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யமாறு இந்திய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாகக் கூறிய அமீர்கான் முத்தாகி, இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதத்தை ஆப்கான் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு, காபூலில் இயங்கி வந்த இந்திய தூதரகம் மீண்டும் தூதரகப் பணிகளை மேற்கொள்ளும் என்று மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது. மேலும் இந்தியாவுக்கான தலிபான் அரசின் தூதர்களை ஏற்றுக்கொள்ளவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் இது புதிய திருப்பமாக இது பார்க்கப் பட்டது.
தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்த சீனா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்குள் முழுமையாக ஆப்கானிஸ்தான் செல்வதை இந்தியா விரும்பவில்லை.
தங்கள் ஆட்சிக்குச் சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் பணியாற்றி வரும் தலிபான்கள் ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை விரும்பவில்லை. எனவே இந்தியாவுடனான உறவைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்தி வருகிறது.
16 டன்களுக்கும் அதிகமான நோய் எதிர்ப்பு மருந்துகளை ஆஃப்கனிஅதான் மக்களுக்காக இந்தியா உதவியுள்ளதாகக் கூறியுள்ள தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர், இருநாடுகளுக்கான நீண்டகால உறவை இது பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இப்படி மனிதாபிமான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், ஆப்கானிஸ்தானில் சுகாதாரம், ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்துவதில் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்கான் தூதரகத்துகான புதிய தூதரை தலிபான் அரசு நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா ஒப்புக்கொண்டிருப்பது, மத்திய அரசின் மிகப்பெரிய ராஜ தந்திரம் என்று பாராட்டப்படுகிறது.
















