வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை மேற்கொள்ளத் திமுக சார்ந்த ஆட்களைச் சென்னை மாநகராட்சி நியமித்துள்ளதாகப் பாஜக மாநில செயலாளர்க் கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான பணிகள் செவ்வாய்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளது.
அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில செயலாளர்க் கராத்தே தியாகராஜன், வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூத் ஏஜெண்டுகளுக்குத் தமிழக பாஜகச் சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் செவ்வாய்கிழமைப் பயிற்சி முகாம் நாளை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை திமுகவும் ஏற்பதாகவும், ஆனால் தேர்தலுக்குப் பின் நடத்த வேண்டும் என்று அவர்களின் தீர்மானம் இருந்ததாகவும் கராத்தே தியாகராஜன் கூறினார்.
















