கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தைத் தலைகுனிய வைத்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் மாணவியை வன்கொடுமைச் செய்த குற்றவாளிகளைச் சுட்டுப்பிடுத்தது, அதன் தாக்கத்தைக் குறைக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையாகப் பேசப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் போற்றப்படுபவர்களாக, கண்ணியமிக்கவர்களாக விளங்குகிறார்கள் என்றும், அத்தகைய தமிழகத்தில் பெண் வன்கொடுமை, கூட்டுப்பாலியல் வன்கொடுமை எனும் கொடூரம் நடப்பது எத்தகைய அவமானம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின்படி நிதி பெற்று செயல்பட்ட பிங்க் மகளிர் ரோந்து வாகனங்கள் என்னவாயிற்று? என்றும், மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற கொடூரக் குற்றத்தில் இருந்து சமூகமும், அரசும், காவல்துறையும் பாடம் கற்க வேண்டும் என்றும், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
			















