நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே நீண்ட காலமாகப் பூட்டப்பட்டிருந்த கோயிலை, திமுக நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் திறந்த வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு திருப்பதி கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் பணியை அர்ச்சகர் பார்த்தசாரதி கவனித்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தசாரதிக்கும், சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக அர்ச்சகர் பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முடிவில் கோயில் இடம் ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமானது என்றும், கோயிலைப் பூட்டி `சீல்’ வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள், கோயிலை 2 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்து உள்ளே சென்று ஆய்வு நடத்தினர்.
இதனையடுத்து, தேர்தலுக்கு முன்பாகக் கோயிலை திறக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதியில் வாக்கு எண்ணிக்கையைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திமுகவினர் தன்னிச்சையாக அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்து அரசியல் ஆதாயத்திற்காகத் தனிப்பட்ட முறையில் கோயிலைத் திறக்க முயற்சிப்பதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
			















