கரூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி வாக்காளர் படிவங்களை திமுகவினர் பெற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து, பூத் எண் 26-ஐ சேர்ந்த வாக்காளர்களைத் தேடி நேரில் செல்லாமல், அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்துப் படிவங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உறுதுணையாக வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கணவர்ச் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், குளத்துப்பாளையத்தில் 106 மற்றும் 198 பூத் எண் கொண்ட பகுதிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் வராமல், திமுக நிர்வாகிகள் வீட்டில் வைத்து படிவங்களைக் கொடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் புரிதல் இல்லாமல் இந்தப் பணியானது நடைபெற்று வருவதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவர்களை மிரட்டி, படிவங்களைத் திமுக நிர்வாகிகள் பெற்றுக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















