வீட்டுவசதி, உணவு, மின்கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் அமெரிக்கர்கள் திண்டாடுகின்றனர். அதிபர் ட்ரம்பின் வரி மற்றும் வர்த்தககொள்கையே இதற்குக் காரணம் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்று சொல்லி இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு வந்த ட்ரம்ப், பதவியேற்றதில் இருந்து, அந்நாட்டின் பொருளாதாரம் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்காவில் மின்கட்டணம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குடும்பத்தின் மொத்த செலவுகளில் மின் கட்டணமே அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு புறம் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாயவசிய தேவைகளுக்கான செலவுகளும் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பில், ஜனநாயகக் கட்சியினரில் 89 சதவீதம் பேரும் குடியரசுக் கட்சியினரில் 52 சதவீதம் பேரும் மற்றும் கட்சி சாராதவர்களில் 73 சதவீதம் பேரும் மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும்,60 சதவீதம் பேர் பயன்பாட்டு செலவுகள் அதிகமாக இருப்பதாகவும், 40 சதவீதம் பேர் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் மின் கட்டணச் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், பத்தில் ஏழு பேர் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் வரி மற்றும் வர்த்தக கொள்கையை எதிர்க்கும் கிட்டத்தட்ட 65 சதவீத அமெரிக்க மக்கள், ட்ரம்பின் தவறான வரி கொள்கையே நாட்டின் பணவீக்க சரிவுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 37.5 சதவீதம் குறைந்துவிட்டதாக (GTRI) ஜிடிஆர்ஐ -எனப்படும் ( Global Trade Research Initiative )அனைத்துலக வணிக ஆய்வுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 8.8 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதை GTRI அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக, ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்த செப்டம்பரில் மட்டும் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 20.3 சதவீதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் 10 சதவீதத்தில் தொடங்கி படிப்படியாக அதிக வரிகள் விதித்த அமெரிக்காவின் நடவடிக்கையால் கிட்டத்தட்ட முக்கிய ஏற்றுமதி துறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை வைத்துள்ள வரி இல்லாத பொருட்களின் ஏற்றுமதியும் 47 சதவீதம் சரிந்துள்ளன. அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில், மருந்துப் பொருட்கள் 15.7 சதவீதமும், தொழில்துறை உலோகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்16.7 சதவீதமும், அலுமினியம் 37 சதவீதமும், தாமிரம் 25 சதவீதமும், வாகன உதிரி பாகங்கள் 12 சதவீதமும் இரும்பு மற்றும் எஃகு 8 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.
அமெரிக்காவுக்கான மொத்த இந்திய ஏற்றுமதியில் 60 சதவீதத்தை வைத்திருக்கும் ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், ரசாயனங்கள், வேளாண் உணவுகள் மற்றும் இயந்திரங்கள் ஆகிய துறைகளின் ஏற்றுமதி 4.8 பில்லியன் டாலரிலிருந்து 3.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 33 சதவீதம் சரிவு என்று GTRI கூறியுள்ளது.
இந்தச் சுழலில், புதிய ஏற்றுமதி சந்தையை இந்தியா உருவாக்கி யுள்ளது. அமெரிக்காவுக்கான பருத்தி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 25 சதவீதம் சரிந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கான பருத்தி ஆயத்த ஆடை ஏற்றுமதியை இந்தியா அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கான கடல்சார் ஏற்றுமதி 26.9 சதவீதம் குறைந்தாலும், சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்துக்கும் இந்தியாவின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 60 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவுக்கான தேயிலை ஏற்றுமதி 22 சதவீதம் சரிந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் ஜெர்மனிக்கு தேநீர் மற்றும் பானங்கள் ஏற்றுமதியை இந்தியா அதிகரித்துள்ளது. மேலும் ஈரானுக்கான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்து 41.07 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கான கம்பள ஏற்றுமதி 26.1 சதவீதம் குறைந்த நிலையில் அதற்கு மாற்றாகக் கனடா மற்றும் ஸ்வீடனுக்கு கம்பள ஏற்றுமதியை இந்தியா அதிகரித்துள்ளது.
பன்முகப் பட்ட ஏற்றுமதி யுக்தியை இந்தியா கடை பிடிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி துறையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார். ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான உலகளாவிய தேவையில் நான்கில் மூன்று பங்கைக் குறிக்கும் வட ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியா முழுவதும் 40 முன்னுரிமை இறக்குமதி நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
ஆனாலும் இந்தியாவின் கம்பள ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 60 சதவீதம், ஒப்பனைத் தயாரிப்புகளில் 50 சதவீதம், ரத்தினங்கள் மற்றும் நகைகளில் 30 சதவீதம் மற்றும் ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதம் இன்னமும் அமெரிக்காவைச் சார்ந்தே உள்ளன என்று வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு வர்த்தகக் குழுக்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே அதிபர் ட்ரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே, தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் உறுதி செய்துள்ளார். குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது, இருநாடுகளின் வர்த்தக உறவில் புதிய தொடக்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
















