தனது கட்சியின் படுதோல்வியால் விரக்தியடைந்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்கா அதன் இறையாண்மையை கொஞ்சம் இழந்துவிட்டதாகக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் நியூயார்க், சின்சினாட்டி உள்ளிட்ட நகரங்களுக்கான மேயர் பதவிக்கும், விர்ஜினியா, நியூஜெர்சி மாகாணங்களுக்கான கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.
குறிப்பாக நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றது டிரம்ப்பை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை மீட்டெடுத்தனர் எனக் கூறினார்.
ஆனால் தற்போது நியூயார்க்கில் சிறிது இறையாண்மையை இழந்து விட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
விரக்தியின் உச்சத்திலேயே டிரம்ப் இவ்வாறு புலம்பி வருவதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
டிரம்ப்பின் வரிவிதிப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளே குடியரசு கட்சியின் படுதோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது.
















