பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளமனூர் பகுதியில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பதில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இதனைக் காவல்துறையினர் சரி செய்த நிலையில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதே சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எந்தவித அறிவிப்பும் அனுமதியும் இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் டிஐஜி மூர்த்தி, எஸ்பி சந்தீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது கண்டன கோஷங்களை எழுப்பிய நபர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதனால் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் சிறிது நேரத்திற்கு அசாதாரண சூழல் நிலவியது.
















