மின்சார கட்டணத்தை மத்திய அரசு குறைத்த போதும், தமிழக அரசு குறைக்க மறுப்பதாகத் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக் கடன் வாங்கியே திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழன் தலை நிமிரத் தமிழனின் பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்தார்.
பின்னர் கருத்தம்பட்டி பகுதிக்கு வருகை தந்த நயினார் நாகேந்திரன் அப்பகுதி நெசவாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது உரையாற்றிய அவர், தேவையில்லாத விஷயங்களுக்குப் பணத்தைச் செலவு செய்து வரும் தமிழக அரசுக் கடன் வாங்கித்தான் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என விமர்சித்தார்.
மேலும், விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள்குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேச இருப்பதாகத் தெரிவித்த அவர், தேவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக உறுதியளித்தார்.
















