பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்கழு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரோடு மாவட்டம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் மேற்கு மதில்சுவர் அருகே, திருக்கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரடியில், வரும் 14.11.2025 முதல் 12.01.2026 வரை 60 நாட்கள், தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொள்ளும் உரிமத்திற்கான பொது ஏலம்/டெண்டர், ரூ. 16 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஏலத்திற்கான நிபந்தனைகளில், 3 ஆவது நிபந்தனையாக, ஏலம் எடுத்தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ள பவானி திமுக நகரச் செயலாளருக்கு வேண்டப்பட்ட திமுகவினர், இங்குள்ள 34க்கும் மேற்பட்ட கடைகளை, ஒரு கடைக்கு 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், திருக்கோயிலுக்கு சுமார் ரூ. 20 லட்சத்துக்கும் மேல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை மீறி, திமுகவினர் சுமார் 34 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காக மட்டுமே இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கொள்ளையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதே சுமத்தப்படும். திமுக ஆட்சியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை, முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
அறநிலையத்துறை அமைச்சருக்கு, தனது துறையின் முறைகேடுகளைக் கவனிக்க நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் மட்டுமே கவனமிருக்கிறது. உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்ற ஏல நிபந்தனைகளின்படி, உடனடியாக, பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டும் என்றும், அறநிலையத் துறையை திமுகவினர் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















