தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
தமிழகத்தில் தொடர்ந்து பல கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள் அரசின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பின்மையை வெளிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மாணவி மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக, கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமன்றி, அநாகரீக உள்ளடக்கங்களை பார்க்கத் தூண்டியவாறு நடந்துகொண்டதாக மாணவிகள் நேரடியாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு தற்போதைய திமுக அரசு குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் செயலின்மையாக இருப்பதே காரணம். கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என எந்தக் கல்வி சூழலிலும் மகளிர் பயம் இல்லாமல் கல்வி கற்கும் நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
தற்போதைய திமுக அரசு இந்த விவகாரங்களில் செயலற்ற மற்றும் கண்களை மூடி கொள்ளும் அணுகுமுறையை தொடர்வதால் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையீட்டு மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
















