அணு ஆயுதங்களை சோதனை செய்ய அமெரிக்கப் போர் துறைக்கு, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், ஆயுதம் பொருத்தப்படாத கண்டம் விட்டுக் கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman III) பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
33 ஆண்டுகளாக அணு ஆயுதச் சோதனையை நிறுத்தி வைத்திருந்தது அமெரிக்கா. இந்நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி, அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க போர்த் துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். அணுசக்தி சோதனைகளை இரகசியமாகச் செய்துவரும் சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் போட்டியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ரஷ்யா, சீனா, வட கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து சோதித்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்காவுடன் போட்டியிடும் அணுசக்தி நாடுகளுக்கு ஈடு கொடுக்க, அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். உலகத்தை 150 முறை அழிக்கத் தேவையான அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்று எச்சரித்த அதிபர் ட்ரம்ப், அதிகமாக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் இன்னும் 5 ஆண்டுகளில் சீனா, அமெரிக்காவை விடவும் அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்க, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், கடந்த புதன் கிழமை, ஆயுதம் பொருத்தப்படாத கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையான மினிட்மேன் 3 (Minuteman III), சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து சோதனைக்காக ஏவப்பட்டதாக அமெரிக்க விமானப்படை குளோபல் ஸ்ட்ரைக் கமாண்ட் (AFGSC- Air Force Global Strike Command) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சோதனை அமெரிக்க கடற்படையின் E-6B மெர்குரி விமானத்தில் இருந்து Airborne Launch Control System என்ற வான்வழி ஏவுதல் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி, நடத்தப் பட்டுள்ளது. இந்த ஏவுகணை 7,500 கிலோமீட்டர் சீறி பாய்ந்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகவும் அணு ஆயுதமின்றி இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
GT 254 என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பின் நம்பகத்தன்மை, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் துல்லியம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மினிட்மேன்-3 ஏவுகணை, அமெரிக்காவின் அணு ஆயுத பாதுகாப்பின் முதுகெலும்பு ஆகும். ஒரு நிமிடத்துக்குள் ஏவப்பட முடியும் என்பதால் இந்த ஏவுகணை மினிட்மேன் என்ற பெயரைப் பெற்றது. 1970 களில் இருந்தே அமெரிக்க விமானப்படையில் இந்த ஏவுகணை உள்ளது.
ஒரே நேரத்தில் பல அணுகுண்டுகளை சுமந்து சென்று 13,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்க வல்லதாகும். நிலத்திலிருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை பல அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். சுமார் 400க்கும் மேற்பட்ட மினிட்மேன் ஏவுகணைகள் அமெரிக்க விமானப்படையில் உள்ளன. இந்த மினிட்மேன்-3 அமெரிக்காவின் அணு ஆயுத பலம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
இது வழக்கமான திட்டமிடப்பட்ட சோதனை தான் என்றும், அதிபரின் உத்தரவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க விமானப்படை உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சோதனை உலகத்துக்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல் என்று சில நாடுகள் விமர்சனம் செய்தாலும், அமெரிக்கா இதைத் தற்காப்பு நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதமான B83 குண்டு, 1.2 மெகா டன்கள் அதாவது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டை விட 80 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும்.
ஒரு நகரத்தின் மீது இந்தக் குண்டு வீசப்பட்டால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தும் நொடியில் அழிந்து போகும். வெடிக்கும்போது இந்தக் குண்டின் வெப்பநிலை 100,000°C யை தாண்டும் என்று கூறப்படுகிறது. இதற்குப் போட்டியாக முன்னாள் சோவியத்யூனியன் 1961ம் ஆண்டுச் சோதனை செய்த (Tsar Bomba) ஜார் பாம்பா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாகும். 50 மெகா டன்கள் அதாவது ஹிரோஷிமாவை விட 3,333 மடங்கு பெரியதான இந்தக் குண்டு வீசப்பட்டால் 100 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தும் சாம்பலாகும் என்று கூறப்படுகிறது.
இன்று அணுசக்தி கொண்ட நாடுகளிடம் பல்வேறு வகையான சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் உள்ளன. அவை உலகத்தையே அழிக்க வல்லன. சர்வதேச அரங்கில் அரங்கில் புதிய அணு ஆயுதப் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை இதோடு முடியுமா? அல்லது மேலும் பல அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நடத்துமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகத்து பேராபத்து என்று உலக பாதுகாப்பு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
















