தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர் 22 மற்றும் 23ம் தேதி நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா சார்பில் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம் என்பது பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சர்வதேச நாடுகள் எல்லாம் தங்களுக்குள் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகப் பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன. அப்படி ஒரு கூட்டமைப்பு தான் ஜி 20. ஜி 20 கூட்டமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் மேல் ஜி 20 நாடுகளே பங்களிக்கின்றன. எனவே, இந்த உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமையேற்று ஜி 20 உச்சிமாநாட்டை தங்கள் நாட்டில் நடத்தி வருகின்றன.
2025ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாட்டை தென்ஆப்பிரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போதுதான் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 கூட்டமைப்பில் நிரஉறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் கடந்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஜி 20 கூட்டமைப்பில் தென்னாப்பிரிக்கா இருக்கக் கூடாது என்றும், அந்நாட்டில் நடைபெறும் இனப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் எதாண்டிச் செல்கின்றன என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், ஜி 20 மாநாட்டில் தாம் கலந்து போவதில்லை என்று கூறிய ட்ரம்ப், தனக்குப் பதிலாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார். இந்தச் சுழலில், ஜி 20 உச்சி மாநாட்டை தென்னாப்பிரிக்கா நடத்துவது அவமானம் என்றும், அந்நாட்டின் தலைமையில் நடக்கும் உச்சி மாநாட்டை அமெரிக்கா முற்றிலுமாக புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகள் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுவதும் தான் புறக்கணிப்புக்குக் காரணம் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஜி20 கூட்டத்தை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ புறக்கணித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான நிதியாண்டில் நாட்டுக்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை 7,500 ஆகக் கட்டுப்படுத்தவுள்ளதாக அறிவித்த அமெரிக்க அரசு, அதில், பெரும்பாலும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெள்ளையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் அப்போதைய அதிபர் ஜோ பைடனின் அரசு 125,000 அகதிகளை அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வரும் டிசம்பர் ஒன்றும் தேதி முதல் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அமெரிக்கா, அடுத்த ஓராண்டுக்கு ஜி 20-க்கு தலைமை வகிக்கும். ஏற்கெனவே, அமெரிக்காவின் ஜி 20 உச்சி மாநாட்டை மியாமியில் 100,000 சதுர அடியில் உள்ள தனது தேசிய டோரல் மியாமி கோல்ஃப் கிளப்பில் நடத்த உள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ட்ரம்பின் மியாமி கிளப் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டும் என்று கூறப்படுகிறது.
















