நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
பயோ வேக்யூம் கழிவறைகள், ஒய்-ஃபை வசதி, முழு தானியங்கி கதவுகள் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் எனப் பன்முக சிறப்புகளைக் கொண்டதாக இந்த ரயில்கள் காட்சியளிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர், பிரதமர் மோடி தொடங்கி வைத்ததையும் சேர்த்து நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
இந்த ரயில்கள் முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்பதால், சுற்றுலாவை ஊக்குவித்துப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
















