அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொள்முதல் நிலையத்தில் கொண்டையம்பட்டி, சித்தாலங்குடி, வயலூர், அரியூர் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் குவியல், குவியலாகக் குவிக்கப்பட்டுள்ளன.
தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நெல்மணிகள் மீது தார்ப்பாய்கள் போட்டு மூடி வைத்துள்ளதாகவும், மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு நெல் மூட்டைக்கு 60 ரூபாய் வரை இடைத்தரகர்கள் பணம் கேட்பதாகவும், அப்படி பணம் கொடுத்தாலும் கொள்முதல் செய்யத் தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், தங்களின் வாழ்வாதாரம் கருதி நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பணம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















