அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் தீவிர சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டுவதற்காக, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூர் பணிமனையில் இருந்தும் அரசுப் பேருந்துகளில், திமுகவினர் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்தும், குறைந்தது 10 அரசுப் பேருந்துகள், திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
திமுகவினரின் இந்த அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், போதுமான பேருந்துகள் இன்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திமுகவினர், பொய்யான கூட்டம் காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை ஏமாற்ற, சாதாரண பொதுமக்களைத் துன்புறுத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இதுபோன்ற அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
















