கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாட்டின் முன்னேற்றம், கல்வி, சமூக வளர்ச்சி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த அமைப்பில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். இந்தநிலையில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ்ஸில் இணைவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாகக் கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதன்படி அம்மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ்ஸில் சேருவதற்கு 5 ஆயிரத்து 252 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 6 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கர்நாடகாவில் ஆளுங்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போன்றவை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
















