வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி மூன்று வேளை இலவசமாக உணவும் வழங்கும் திட்டத்தை நவம்பர் 15-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக விளம்பர மாடல் திமுக அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி, கொடுமைகள் பல செய்து வரும் திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. பகல் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஏக்கத்தில், கடைசி காலத்தில் திமுக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே, பணிநிரந்தரம் வேண்டியும், தனியார் மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தமிழக காவல்துறை கைது செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பணியிடத்தை, திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்ததால் மாதம் ரூ. 23,000-க்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த தூய்மை பணியாளர்கள், ரூ. 16 ஆயிரம் சம்பளம் பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் இதே பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது; 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது என்ற மூன்று பிரதான கோரிக்கையை முன் வைத்து, ஆளும் திமுக அரசுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை மடைமாற்ற, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம் என்ற மோசடி அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சுகள், அறிக்கைகள், கடிதங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், எண் 153-ல், ‘‘அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, வாக்குறுதி எண் 285-ல் ‘‘ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள், ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2021-ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த இந்த வாகுறுதிகள், ஸ்டாலின் அவர்களுக்கு நினைவில் இருக்கிறதா? என்று எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில், “10 முதல் 12 ஆண்டுகளாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு, தூய்மைப் பணியாளர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் எனவும் திரு. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார். ஆனால் தற்போது நடப்பது என்ன?
விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். போராட்டம் நடத்தும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை. போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச அவருக்கு மனமில்லை. அதிமுக ஆட்சியில் போராடிய போது தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய திரு. ஸ்டாலின் அவர்கள் தற்போது இரட்டை வேடம் போடுகிறார்.
7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றி கையெழுத்து பெற முடியுமா என்று திமுக அரசின் அமைச்சர்களும், மேயரும் முயலுகின்றனர். ஆனால், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுக்கு மனமில்லை. தூய்மைப் பணியாளர்களை கொண்ட சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்ற பல முன்னெடுப்புகளை பல்வேறு மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. தூய்மைப் பணி சார்ந்த பணிகளும் கூட இதுபோன்ற தூய்மைப் பணியாளர் அமைப்புகளுக்கு கொடுத்து பிற மாநில அரசுகள் வழங்கி ஊக்கமளித்து வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் நடப்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. திமுக அரசியல் பின்புலத்துடன், பினாமியாக செயல்படும் சில தனியார் நிறுவனங்களுக்கு இத்தகைய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி இன்ன பிற தூய்மைப் பணிகள் அனைத்தும் திமுக அரசின் ஆசி பெற்ற நிறுவனங்களுக்கே தரப்படுகின்றன. இந்த நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் அவலம் நடைபெறுகிறது.
தற்போது கோபத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை திசை திருப்பும் முயற்சியாக மூன்று வேளை உணவு என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றுகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். நாள் தவறாமல் வழங்கப்படும் உப்புமாவை பார்த்த மாணவ, மாணவியர் முகம் சுழிக்கும் நிலைமை தான் இருக்கிறது.
முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் போட்டோ எடுக்கும்போது தான் பூரி, பொங்கல், வடை போன்றவை கிடைக்கும் என்பது மாணவ, மாணவியர் அறிந்திடவில்லை. கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என முழு மூச்சாக கடைசி காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு எப்படி உணவு வழங்கும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா? 15-ஆம் தேதி திரு. ஸ்டாலின் அவர்கள் போட்டோ எடுக்கும்போது மட்டும் தான் வகை வகைான உணவு இருக்கும். அதன் பிறகு என்ன கிடைக்கும்?
தூய்மைப் பணியாளர்களின் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்ட திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியையும் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க டெண்டர் கோரி இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் தூய்மைப் பணியாளர்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்க மட்டுமே திமுக-வினருக்கு தெரியும். அன்றாட வாழ்க்கைக்காக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களின் வலியையும், வேதனையையும் திமுக அரசு உணரவில்லை.
முதலமசை்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தூய்மைப் பணியாளர்கள் மீது துளியளவு அக்கறை இருந்தால் இந்த விளம்பர மாடல் மோசடி பிரசாரங்களை கைவிட்டு விட்டு, தூய்மைப் பணியாளர்களின் நியாயமான மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்று எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
















