இந்தியாவில் ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பின்னணியும், அவர்கள் இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் திட்டங்களும் அனைவரும் மேலும் அதிர்ச்சியில் உறைய செய்பவையாக உள்ளன.
குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரியல் தாக்குதல் நடத்துவது அவர்களின் முக்கிய திட்டமாக இருந்துள்ளது. ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமலும், நேரடியாகத் தாக்குதலில் ஈடுபடாமலும் இந்த உயிரியல் தாக்குதலை நடத்த முடியும். இந்த உயிரியல் தாக்குதலை நடத்த ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைத் தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். உணவு மற்றும் குடிநீரில் இந்த விஷத்தைக் கலந்துவிட்டால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல முடியும்.
அதிக மக்களை கொல்ல வேண்டும் என்றால் அதிகளவில் ரிசின் விஷம் தேவைப்படும். எனவே, அதனைத் தயாரிப்பதற்கான பணி மருத்துவரும், பயங்கரவாதியுமான அகமது மொஹியுதீன் சையத் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டையே ஆய்வகமாக மாற்றிய அவர், இரவு பகலாக ரிசின் விஷத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசம் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆசாத் சுலேமான் ஷேக் மற்றும் முகமது சுஹைல் சலீம் கான் ஆகிய இருவர் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர்.
உலகளவில் கடுமையான விஷமாகக் கருதப்படும் ரிசின் ஆமணக்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அடிப்படையில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட விதைதான் ஆமணக்கு. விளக்கெண்ணெய், உரங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும், பொடுகு, தோல் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்கவும் இந்த ஆமணக்கு விதை பயன்படுகிறது. இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இதே ஆமணக்கு விதைகளில் இருந்துதான், ஆகப்பெரும் நச்சுத்தன்மை வாய்ந்த ரிசின் என்ற ராசாயனமும் தயாரிக்கப்படுகிறது. 1888ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த பீட்டர் ஹெர்மன் ஸ்டில்மார்க் என்பவர்தான், முதன்முதலில் ரிசின் நச்சுப்பொருளை கண்டுபிடித்தார்.
அன்று முதல் இன்று வரை இதனை கொண்டு உலகம் முழுவதும் பல கொலைகள் நடைபெற்றுள்ளன. ஒருவர் ரிசினை உட்கொண்ட சில மணிநேரங்களுக்குள் உடல் எதிர்வினையாற்ற தொடங்கும். காயச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, குமட்டல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட ஆரம்பிக்கும். குறிப்பாக நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு, சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்படும்.
சமயங்களில் தோலின் நிறம் நீலமாக மாறக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் மாயத்தோற்றங்கள் தென்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும், சீறுநீரில் ரத்தம் வெளியேறுதல், வலிப்பு போன்ற பாதிப்புகளையும் ரிசின் விஷம் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படாவிட்டால், ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்க தொடங்கும். குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் சேதமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசின் விஷத்தை முறிக்கும் மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளை வழங்குவதன் மூலம், நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ரிசின் விஷத்தை குடிநீர், கோயில் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றில் கலந்து, மக்களின் உயிரை பறிக்க, அகமது மொஹியுதீன் உள்ளிட்ட 3 பேரும் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் முளையிலேயே முறியடிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளன.
















