ஆளும் கட்சியே சட்டத்தை மதிக்காமல் சாலைகளின் செண்டர் மீடியன்களில் கொடிக் கம்பங்களை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சாலைகளின் செண்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளும் கொடிக்கம்பங்கள் அமைப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
இதற்கு அரசு அனுமதி அளிப்பதாகவும், இந்த விதிமீறல்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அதேபோல் சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி அது குறித்த வீடியோ காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படும் என்றும் நீதிபதி தமிழக அரசை எச்சரித்தார்.
















