மகாராஷ்டிராவில் மணமகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரைத் திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த டிரோன் கேமரா பின்தொடர்ந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் சுஜல் ராம் சமுத்ரா என்பவரின் திருமண நிகழ்வு நடைபெற்றது. அப்போது, டிஜே பார்ட்டியில் மணமகனுக்கும், அங்கு வந்த ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், மணமகன் அந்த நபரைப் பிடித்துக் கீழே தள்ளியதையடுத்து, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்த மர்ம நபர் மணமகனை குத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மர்ம நபரை பிடிக்கக் கத்திக் கூச்சலிட்டனர்.
அப்போது, திருமண நிகழ்வை வீடியோவ பதிவு செய்துக்கொண்டிருந்தவர் தனது டிரோன் கேமரா மூலம் குற்றவாளியையும் அவரது கூட்டாளியையும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் வரை பின்தொடர்ந்துள்ளார்.
இது குறித்த வீடியோ வெளியான நிலையில், குற்றவாளியை அடையாளம் கண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
















