இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே கடந்த 11ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்குப் பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட அமைப்பு, இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தன் நாடு கிழக்கு எல்லையில் இந்தியா, மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தான் என இருமுனைப் போரை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
மேலும், முதல் சுற்றில் இறைவன் தங்களுக்கு உதவியதாகவும், இரண்டாவது சுற்றிலும் கடவுள் தங்களுக்கு உதவுவார் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
















