தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
நாடு முழுவதும் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி இருக்கிறது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்று 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. எனவே, வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலிலிருந்து நீக்கவும், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாகப் பீஹாரில் இந்தப் பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்குவங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நவ.4ல் தொடங்கி டிச.4 வரை நடக்கிறது. இதனிடையே முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், ஒரே வீட்டில் 35 போலி வாக்காளர்கள் இருப்பது எஸ்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.
G.K.M காலனி ஜீவானந்தம் தெருவில் உள்ள 64-ஆம் நம்பர் வீட்டில் மொத்தமாக 38 வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. ஆனால் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ-2 ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரித்ததில், அந்த வீட்டில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வசித்து வருவதாகவும், மீதமுள்ள 35 பேர் யார் என்றே தெரியாது எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தொகுதியிலேயே 35 போலி வாக்காளர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளதாகப் பாஜக மாவட்ட நிர்வாகி இளங்கோ தெரிவித்துள்ளார்.
முதல்வர் தொகுதியில் கண்டறியப்பட்ட 35 போலி வாக்காளர்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த நேர்மையாகத் தேர்தல் நடைபெறுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் மூலம் அது சாத்தியப்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
















