கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி, தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், கூட்டணிக்குள்ளாகவே போட்டி வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகியவற்றோடு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் பீகார் தேர்தலில் இண்டி கூட்டணியின் வரலாற்றுத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்துக் களம் கண்ட இண்டி கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 72 தொகுதிகளை வெற்றிபெற்றிருந்த பாஜக தற்போது 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனதா தளம் தற்போது 80க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த ஆர்ஜேடி தற்போதைய தேர்தலில் 30க்கு குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மிகப்பெரிய பின்னடவை சந்தித்திருக்கிறது.
தொகுதிப்பங்கீடு தொடங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக நடைபெற்றது தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதே நேரத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி தொகுதிப்பங்கீடு, போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு, முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பதில் குளறுபடியென இண்டி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களே அக்கூட்டணிக்கு தோல்வியைப் பெற்று கொடுத்திருக்கிறது.
பீகார் மாநிலத்தில் தான் சந்திக்கப் போகும் தோல்வியை முன்கூட்டியே கணித்த இண்டி கூட்டணி, மக்களை திசை திருப்புவதற்காக வாக்குத் திருட்டு எனும் நாடகத்தைப் பிரச்சாரமாக அரங்கேற்றியது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பீகாருக்கே நேரடியாகச் சென்று ராகுல்காந்தியுடன் இணைந்து பேரணியில் பங்கேற்றார்.
தமிழகத்தில் வசிக்கும் பிகார் மக்கள் குறித்த திமுக தலைவர்களின் அருவருக்கத் தக்க பேச்சு அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது ஆர்ஜேடிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஏற்கனவே, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த அவதூறு பேச்சு, வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் தலைவர் ஸ்டாலின் தான் தமக்கு பிடித்த தலைவர் எனத் தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக அறிவித்ததும் அவரின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
அதோடு வாரிசு அரசியலை பீகார் மாநில மக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுகள் நிதர்சனமான உண்மை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ராகுல்காந்தியின் ஆதரவு, 85க்கும் அதிகமான இடங்களில் பேரணி, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதி என ஆர்ஜேடி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியின்றியும், திமுகவின் ஆதரவின்றியும் தனித்து நின்றிருந்தால் கூட ஆர்ஜேடி கணிசமான தொகுதிகளை வென்றிருக்கும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
அதே நேரத்தில் நிதீஷ்குமாரின் வயது, அடிக்கடி மாறும் நிலைப்பாடு ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பொய்பிரச்சாரங்களும் இந்தத் தேர்தலின் மூலம் தவிடிபொடியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகக் கருதப்பட்ட பீகார் மாநிலத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி வாக்குத் திருட்டு எனும் பொய் பிரச்சாரத்திற்கும், வாரிசு அரசியலுக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது.
















