பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்விய நிலையில், காங்கிரஸ் அங்கம் வகித்த இண்டி கூட்டணி கடுமையான சறுக்கலை சந்தித்துள்ளது. பீகார் தேர்தலில் பொதுமக்களால் ஓரம்கட்டப்பட்ட காங்கிரஸ், இனி எழுந்திருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
வாக்கு திருட்டு என்று ஒன்றே இல்லை என்று தேர்தல் ஆணையம் எவ்வளவோ கூறியபோதும், வாயாலே வடை சுடுவது போன்று, S.I.R, வாக்குத் திருட்டு எனக் கூப்பாடு போட்டு வந்த காங்கிரஸ் கட்சிக்குப் பீகார் தேர்தல் சரியான பாடம் புகட்டியுள்ளது. பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது காங்கிரஸ்… ராகுல்காந்தியின் “வாக்கு சோரி” வாய் சவடால், பீகார் மக்களிடையே பலிக்காத நிலையில், காங்கிரசும், இண்டி கூட்டணியும் வாயடைந்துப் போயிருக்கிறது… குறிப்பாக வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி 110 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் பேரணி நடத்தியிருந்தார்.
ஆனால், அவர் யாத்திரை மேற்கொண்ட ஒரு தொகுதிகளில் கூட இண்டி கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை… பீகார் அரசியல் வரலாற்றை வடிவமைப்பதில் ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்தது காங்கிரஸ் கட்சி… 1990ம் ஆண்டு பீகார் மாநில அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைக்கும் முன்பு, ஜகந்நாத் மிஸ்ரா முதலமைச்சராகப் பணியாற்றியபோதுதான், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த குறிப்பிடத் தக்க தருணம். அதன் பின்னர் காங்கிரசின் செல்வாக்கு அங்குச் சரிய தொடங்கியது. நிறுவனச் சிதைவு, ஆளுமைமிக்க தலைமையின்மை, உட்கட்சி பூசல் போன்ற காரணங்கள் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவை தந்தன.
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை இலக்காகக் கொண்ட ராகுல்காந்தியின் வாக்கு சோரி குற்றச்சாட்டுகள், தேஜஸ்வி யாதவின் வாக்காளர் அதிகார யாத்திரை போன்றவை உண்மையில் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 1952ம் ஆண்டு 330 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 239 தொகுதிகளை வென்று ஆட்சியமைத்த காங்கிரஸ், 1957, 1962,1967, 1969, 1972 என அடுத்தடுத்து தேர்தல்களில் ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கவே இல்லை.
எம்ர்ஜென்ஸி-க்கு பின்னர் 1977ம் ஆண்டு பீகாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 21 இடங்களை மட்டுமே பெற்று முதல்முறையாக ஆட்சியை இழக்க, Karpoori Thakur தலைமையிலான ஜனதா கட்சி அரியணை ஏறியது. 1980, 1985ம் ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 1990ம் ஆண்டு லாலு பிரசாத் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியைக் கைப்பற்றியது. தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் 243 தொகுதிகளாகச் சுருங்கிய பீகாரில், 2005ம் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது… இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
2010ம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ் நிலைமை மேலும் மோசமடைந்தது. வெறும் நான்கு என்ற ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அப்போதே கரையத் தொடங்கிவிட்டது. 2015ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 27-ல் வெற்றி பெற்று 11.11 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது.
2020 சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ், 19-ல் மட்டுமே வெற்றி பெற்று, 9.48 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2025ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் மட்டுமே போராடி வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ் அழிவின் விளிம்பில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
செப்டம்பர் தொடக்கத்தில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்திய பிறகு, ராகுல் காந்தி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பிரச்சாரப் பாதையில் இருந்து விலகியிருந்தது, தொகுதி பங்கீட்டில் இழுபறி, காங்கிரஸின் உட்கட்சி பூசல், கூட்டணியில் இணக்கமின்மை போன்றவை எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு அப்போதே வேட்டுவைத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.
ஏனெனில் பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத மோசமான, படுதோல்வியை சந்தித்திருக்கிறது காங்கிரஸ்…. ஒரு காலத்தில் பீகாரின் அரசியல் அடையாளத்தை வடிவமைத்த ஒரு கட்சிக்கு, இப்போது ஒவ்வொரு தேர்தல் சுழற்சியிலும் அதன் செல்வாக்கு கடுமையாகச் சரிந்து வருவது, மக்களிடையே காங்கிரஸ் மீதான அதிருப்தியையே காட்டுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குப் பீகாரில் விழுந்த அடி, தமிழகத்தில் விழுக்கூடும் என்று அரசிய்ல நோக்கர்கள் கருதுகின்றனர்… ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொள்வதா, அல்லது கழற்றிவிடவா என யோசிக்கத் தொடங்கிவிட்டது திமுக.
















