பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சி போன்றவற்றை பொதுமக்கள் விரும்புவதில்லை என்பதையே நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்குக் குடும்ப அரசியலே முழுமுதற் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆட்சியில் அமரும் அதிகாரத்தை வழங்கியபோது, கால்நடை தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், தனது முதலமைச்சர் பதவியை மனைவிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகளுக்கு எம்.பி., பதவி, மகன்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி, உறவினர்களுக்குப் பொறுப்புகள் என வாரி வழங்கிக் கட்சியினரை தவிக்கவிட்டதோடு, தனது குடும்பத்தின் மூலம் முழு மாநிலத்தையும் மொத்தமாகச் சுரண்டினார். லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கால்நடை தீவன ஊழல், அரசுக்கு வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றது என அவர்மீதான அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள், பீகார் மக்கள் மனதில் பசுமரத்தாணி போன்று அப்படியே பதிந்து நின்றது…லாலு ஆட்சிக் காலத்தில், அரசு வேலைகளில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாகப் பணிகளை ஒதுக்கியதும் மக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய லாலுவும், அவரது குடும்பத்தினரும், நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில், பீகாரை ஆள லாலு குடும்பம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த அம்மாநில மக்கள், ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் புறக்கணித்ததால், தேர்தலில் குறைந்த இடங்களையே அக்கட்சி பெற்றிருக்கிறது. ஏற்கனவே லாலு குடும்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ராஷ்டிரிய கட்சி இன்னொரு குடும்ப கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர்… அந்த அதிருப்தியே பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் வரலாற்றில் இல்லாத தோல்வியைப் பரிசாக அளிக்கக் காரணம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கையளிக்கக்கூடிய, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்த சூழலில், நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று தேர்தல் களத்திற்கு வந்த மகாகத்பந்தன் கூட்டணிக்குப் பீகார் மக்கள் மரண அடியை கொடுத்திருக்கின்றனர். இதேபோன்று நிலை தமிழகத்திலும் நிலவுகிறது.
திமுக என்ற குடும்ப ஆட்சி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்துள்ள நிலையில், வரும் தேர்தலில், பீகார் மக்கள் போன்று, தமிழக மக்களும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
















