அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் தங்களையும் அழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய் முகவரி மாற்றி அனுப்பிய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கான முக்கிய கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையங்கள் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிள்ளார்.
அந்தக் கடிதத்தில் அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் தங்களை அழைப்பதில்லை எனக் குற்றம்சாட்டியிருந்த அவர், தவெகவை ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தைத் தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலருக்கு அனுப்புவதிற்கு பதிலாகச் சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். ஒரு கட்சியின் தலைவர் முகவரி மாறிக் கடிதத்தை அனுப்பிய சம்பவம் சமூக வலை தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
















