காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சூரத் விமான நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பீகார் தேர்தல் தோல்விக்கான காரணத்தை, தங்கள் சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு கூட விளக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் உள்ளதாக விமர்சித்தார்.
அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதாகவும் சாடினார்.
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் கட்சியை நாடே ஏற்க மறுத்துவிட்டதாகவும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் செயல்பட்டவர்கள் கூட இன்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து சரிவுதான் எனக் கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்…
















