அரசியல் நோக்கத்துடன் தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக ஆணை இல்லாத, தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் நிறுவப்பட்டு தலைமை தாங்கப்படும் ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவாமி லீக் கட்சியை அரசியல் சக்தியாக இல்லாமல் ஆக்கவே இடைக்கால அரசில் உள்ள தீவிரவாதிகள் வெட்கக்கேடான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ஷேக் ஹசீனா, மனித உரிமைகள் மற்றும் மேம்பாடுகுறித்த தனது அரசின் சாதனைகளை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் துன்புறுத்தப்பட்டு தப்பி ஓடிய லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் 15 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 450 சதவீதம் அதிகப்படுத்தி லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தச் சாதனைகள் மனித உரிமைகள்மீது அக்கறை இல்லாத ஒரு தலைமையின் செயல்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எதிரான மரண தண்டனை ஒருதலைப்பட்சம் மற்றும் அரசியல் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
















