டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாம்போரேவைச் சேர்ந்த ரஷீத் அலி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட, உமர் நபியுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் 13 பேர் வரை உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக, NIA அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில் இந்தப் பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புடைய மருத்துவர்கள், பேராசிரியர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு பொருத்தப்பட்ட காரை ஓட்டி வந்தது மருத்துவர் உமர் உன் நபி என்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் ஃபரிதாபாத் அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் உள்ள பொது மருத்துவத்துறையில் உதவி பேராசிரியராக இருந்ததும் NIA விசாரணையில் தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவருக்குச் சொந்தமான மற்றொரு காரையும் NIA அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 73 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 9 மில்லி மீட்டர் அளவில் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட இரு CARTRIDGE-களும், ஒரு காலியான CARTRIDGE-ம் சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது அந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்தும் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றமாகப் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரையும் NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான ரஷீத் அலி கார் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்திய உமர் உன் நபியுடன், நெருங்கிய தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை உமர் நபியுடன் இணைந்து வாங்கிய ரஷீத் அலி, அதில் IED வெடிகுண்டைப் பொருத்தவும் உதவியதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபரிதாபாத் நகரில் OLX செயலி மூலம் HYUNDAI i20 காரை வாங்கிய விதம், தாக்குதலில் உயிரிழந்த உமர் நபியின் தொடர்புகள் மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் விசாரணை உள்ளிட்டவை இந்தத் தாக்குதலின் விரிவான திட்டமிடலை எடுத்துரைப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கிடையே கைது செய்யப்பட்ட ரஷீத் அலிக்கு 10 நாட்கள் NIA காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்தப் பயங்கரவாத தாக்குதலின் பின்னணி வலையமைப்பை கண்டுபிடிக்கும் முனைப்பில், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஃபரிதாபாதைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபராகக் கருதப்படும் மருத்துவர் அதீல் ரதர் குறித்து, அனந்த்நாக் மருத்துவ கல்லூரியில் பயிலும் ஒரு பெண் மருத்துவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பின் மத்திய டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய சாலைகளில் போலீசாரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரை பொது இடங்களில் கைவிடப்பட்ட 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 417 அபராத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
















