சென்னை மாவட்டத்தில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் இன்று தொடங்கி 25ம் தேதி வரை 8 நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையங்களில காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் உதவி மையங்களில் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம் எனவும் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பெறுமாறும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கேட்டுக்கொண்டுள்ளார்
















