மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ஆட்சி செய்து வருகிறது.
பீகாரில் அண்மையில் நடைபெற்ற பேரவை தேர்தலிலும், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.
இந்தநிலையில் பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில சட்டமன்றங்களில் இதுவரை இல்லாத அளவுக்குப் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் தங்களது எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ கடந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.
2015ல் மாநில சட்டமன்றங்களில் 997 பாஜக எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது, ஆயிரத்து 654 எம்எல்ஏக்கள் உள்ளனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் போல் இல்லாமல் பாஜக ஒவ்வொரு தொகுதியாக, ஒவ்வொரு மாநிலமாகப் போராடி உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தி வருவதாக அக்கட்சியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் செயல்படும் கட்சிக்குத்தான் எதிர்காலம் உண்டு என்றும் மரபு ரீதியில் செயல்படும் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியைப் பாஜக மறைமுகமாகச் சாடியுள்ளது.
















