சேலத்தில் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியின் 22 வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரம் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் கடந்த 10 ஆண்டுகளாகச் சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சாலையைச் சரி செய்து தரக்கோரி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சரி செய்யாமல் இரவோடு இரவாகத் தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, சாலையின் மீது வாகனங்கள் சென்ற நிலையில் ஆங்காங்கே தார் பெயர்ந்து, கையில் பெயர்த்து எடுத்தாலே பிரிந்து வரும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி, தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பெயர்ந்த தார் சாலையை அகற்றி, மீண்டும் சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
















