கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிலையில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
இந்த கிரிவிலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளது.
இதில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேர பகவான் வணங்கிய பின் கிரிவலம் வருவதாகவும், அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஜதீகமாக கூறப்படுகிறது.
கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வானுலகத்தில் இருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை பூஜை செய்கிறார். அவ்வாறு பூஜை செய்துவிட்டு இரவு 7 மணியளவில் குபேர பகவான் கிரிவலம் செல்கிறார்.
அதே நாளில் நாமும் அவருடன் மிகவும் பக்தியுடன் குபேர நாமம் சொல்லிக்கொண்டு கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளும், குபேரனது அருளும் கிடைக்கும்.
இதன் மூலம் நாம் நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும், நாம் நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாக செல்வ செழிப்புடன் இருக்கலாம் என்பது ஐதீகம். இந்நிலையில் இன்று ஏராளமான பக்தர்கள் குபேர லிங்கத்தை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.
















