வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தொழிலாளர்கள் கூட்டம், கூட்டம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருகின்றனர். இது S.I.R நடவடிக்கையின் குறிப்பிடத் தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
உண்மையான வாக்காளர்களை கண்டறிந்து வாக்குரிமையை அளிக்கவும், ஒருவர் பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டதே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால், பீகாரில் S.I.R நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான வாக்காளர்கள் குழப்பமின்றி தங்களது வாக்குகளை செலுத்தினர்.
பீகாரைத் தொடர்ந்து கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்கத்தில் S.I.R பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு அடையாளத்தை மறைத்து, அகதிகளாக, சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
வீடு, வீடாகச் செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் S.I.R படிவங்களை விநியோகித்து, சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவிய வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்கே திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் உள்ள ஹக்கிம்பூர் சோதனைச் சாவடியில் மூட்டை முடிச்சுகளோடு குடும்பம், குடும்பமாக வங்கதேச தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். S.I.R நடவடிக்கையால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, சொந்த நாட்டுக்குத் திரும்புவதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரிக்ஷா இழுத்தல், கட்டுமான பணி, செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்ததாகவும் வங்கதேச தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அங்குக் கூடியிருந்த தொழிலாளர்கள் பலர் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா, குல்னா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதும் தெரியவந்துள்ளது.
சொந்த நாடு திரும்பும் வங்கதேசத்தினருக்காக ஹக்கிம்பூர் சோதனை சாவடியில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எல்லைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, எல்லை பாதுகாப்புப் படையினரும் ஆவணங்களைச் சரிபார்த்து அனுப்பி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், உண்மையான வாக்காளர்களைக் கண்டறிவதோடு, இது போன்ற ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும் உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
















