தீபத் திருவிழாவிற்கான விளக்குகள் திண்டுக்கல்லில் அமர்க்களமாகத் தயாராகி வருகின்றன. பாரம்பரிய பெருமையுடன் பலரையும் கவர்ந்த கார்த்திகை தீப விளக்குகள்குறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைப்பட்டியில் கைவினை சுடுமண் சிற்ப கலைஞர்கள் கலை கூடம் செயல்பட்டு வருகிறது.
இங்குதான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள், நவராத்திரியை ஒட்டி கொலு பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைப் பொருள்களை இங்குள்ள கைவினை கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.
அந்த வரிசையில்தான் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி களைகட்டியுள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு சுட வைக்கப்பட்டு பின்னர் கைகளால் கார்த்திகை சுட்டி விளக்குகள் தயாராகின்றன.
தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு, குபேர விளக்கு, லட்சுமி விளக்கு, ஒரு அடுக்கு முதல் நூறு அடுக்கு எனப் பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்யும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த விளக்குகளை சூலையில் சுட வைத்து எடுத்து அதற்கு ஏற்பப் பல்வேறு வண்ணம் தீட்டப்பட்டு, பார்க்கும் போதே கண்களை கவரும் வகையில் தயாராகின்றன. 20-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலான விலையில் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, கோவை,சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில் தயாராகும் கார்த்திகை தீப விளக்குகள் பல மாநிலத்தவர்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
















