கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு, 2 நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை எனத் தெரிவித்துள்ளது.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், ஒப்புதல் கேட்டு, அதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பி உள்ளது.
அதில் 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 20 லட்சம் மக்கள் தொகைக்கு மேலுள்ள நகரங்களில் மட்டுமே, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் ஆனால் கோவையில் 15 லட்சத்து 84 ஆயிரம் பேரும், மதுரையில், 15 லட்சம் பேரும்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















