சென்னை கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து தி.நகருக்கு சிமெண்ட் கலவையுடன் கலவை லாரி புறப்பட்டுச் சென்றது.
கோயம்பேடு மேம்பாலம் அருகே அரும்பாக்கம் நோக்கி இடப்புறமாக வளைந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கிரேன் உதவியுடன் சிமெண்ட் கலவை லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் கொட்டிய சிமெண்ட் கலவையால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















