இந்தியாவிற்கு 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் அதிநவீன எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகள் மற்றும் ஜாவலின் ஏவுகணை அமைப்பு ஆகியவை அடங்கும்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் இந்த விற்பனைக்கான ஒப்புதலை அமெரிக்க காங்கிரஸுக்கு வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விற்பனை குறித்து DSCA வெளியிட்ட அறிக்கையில், இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்புக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் துல்லியமான ராணுவ தளவாடங்களை அமெரிக்கா வழங்குவதன் மூலம், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் மேம்படும்.
இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய சக்தியாக இருக்கும் இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.
















